அப்புறம்?
சுமார் இரண்டு மாதம் காணாமல் போயிருந்த ராகுல்ஜி தானாகவே நாட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். வந்த வேகத்தில் விவசாயிகள் சார்பாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டார். நாடாளுமன்றம் போய் மோடியை ஒரு பிடி பிடித்தார். அடுத்தநாள் இணையச் சமத்துவம் பற்றிப் பேசினார். ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டத்தில் தூக்கில் தொங்கி செத்துப்போன விவசாயியின் உடலைப் போய் பார்த்தார். பிறகு கேதார்நாத்துக்கு வேண்டுதலை நிறைவேற்ற 16 கிலோமீட்டர் மலை ஏறிப் போய்வந்திருக்கிறார்.
என்ன வேண்டுதலாக இருக்கும்? இரண்டுமாதம் எங்கே போயிருந்தார்? யாருக்கும் சரியாகத் தெரியப்போவதில்லை. ஆனால் வந்ததில் இருந்து சுறுசுறுப்பாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை போன இடத்தில் உரையாற்றும் பயிற்சி எதுவும் அவர் எடுத்திருக்கக்கூடும். அவர் டெல்லி திரும்பியதும் காங்கிரஸ் சார்பில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில்,“பிரதமர் மோடி தன்னுடைய தொழில் துறை நண்பர்களிடம் தேர்தலில் நிற்பதற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த விரும்புகிறார். அதற்காக உங்கள் நிலங்களில் கைவைக்கிறார்” என்றார்.
கடந்த 11 ஆண்டுகளாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர். மூன்றே மூன்று முறைதான் அவர் பேசியிருக்கிறார். எட்டு விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மூன்றே மூன்று கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார். ஆனால் “எதிர்காலத்தை ஆலோசிக்கும்” விடுப்புக்குப் பின்னர் மூன்று நாட்களில் இரண்டுமுறை நாடாளுமன்றத்தில் அவர் புத்துணர்வுடன் பேசியிருப்பதுதான் கவனிக்க வைத்துள்ளது. நிலம் கையகப் படுத்தும் மசோதா, இணைய சமத்துவம் ஆகிய இரு முக்கிய விஷயங்கள் பற்றி அவர் பேசினார். அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது இதுபோன்ற தீவிரமான வெளிப்படையான செயல்பாடுதான்.
என்ன சிக்கல் என்றால் இதற்கு முன்புவரை அவர் எப்போதாவதுதான் அதிரடியாகச் செயல்படுகிறார்;மற்ற நேரங்களில் காணாமல் போய்விடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் சட்டத்திருத்தத்தைக் கிழித்து எறியவேண்டும் என்று சொன்னது; காங்கிரஸ் நிர்வாகக் கூட்டத்தில் அதிகாரம் விஷம் போன்றது என பேசியது, போன்ற விஷயங்களை விட்டால் ராகுல்காந்தி கை நிறைய அதிகாரமும் வாய்ப்பும் இருந்தும் எதையும் செய்யவிரும்பாத அரசியல்வாதியாகவே தன்னைக் காட்டி வருகிறார். 2007-லிருந்து காங்கிரஸின் மாணவர், இளைஞர் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்திவருகிறார் ராகுல். ஆனாலும் கூட வாரிசு அடிப்படையில் ஆட்கள் முன்னிறுத்தப்படும் கலாச்சாரத்தை அந்த அமைப்புகளில் மாற்றமுடியவில்லை. அவரும்கூட வாரிசுதான் என்பது காலில் கட்டப்பட்ட கல்லாகத் தடுக்கிறது.
காங்கிரஸ் சார்பில் ஊடகங்களிடம் பேசும் குழுவிலுள்ள ஒருவரிடம் பேசினோம். “அவர் எப்போதும் சுறுசுறுப்பாக கட்சி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஊழலுக்கு எதிரானவராகவும், உட்கட்சி ஜனநாயகம் வளர்ப்பவராகவும், வாக்குகளைத் தாண்டி அரசியல் செய்பவராகவும்தான் அவர் இருந்தார். ஆனால் அதற்கான மதிப்பை உங்களைப் போன்ற ஊடகங்கள் தரவில்லை. இப்போது அவர் வாயைத்திறந்து நாடாளுமன்றத்தில் சிறப்பாக இரண்டு முறைபேசினார். ஊடகங்கள் பாராட்டுகின்றன. பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதே அவரது நிலைப்பாடு” என்றார் அவர்.
கட்சிக்குள் சோனியாவும் ராகுலுக்கும் இடையே பெரும்கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாக ராகுல் தன்னைச் சுற்றிய பிம்பத்தை உருவாக்கி வந்திருக்கிறார். காங்கிரஸ் ஒரு கட்சியாக தன்னுடைய பலமாக அதைத்தான் கருதியிருக்கிறது. இதைவிட்டு விலகிச்
சென்றதே 543- இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 43 இடங்கள் மட்டுமே பெறும் அளவுக்கு பலவீனப்படுத்தியது.
சோனியா, ராகுல் என்று இரண்டு அதிகார மையங்கள் இருப்பது அக்கட்சிக்கு சிக்கலாகவே இருக்கும் என்பதால் ராகுல்காந்தி கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதே அக்கட்சிக்குள் புது ரத்தம் பாய வழிவகுக்கும்.
கேதார்நாத்துக்குப் போய்வந்ததை அடுத்து ஒரிசாவில் தொடங்கி டெல்லி வரைக்கும் 1000 கிமீ பாத யாத்திரையில் நடந்து செல்ல இருக்கிறாராம் ராகுல். கோயில் யாத்திரைகள், பாதயாத்திரைகள் என அவர் பல கிமீ நடக்கவேண்டும். அடுத்த தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளனவே?
கட்சியில் கணிசமான பேரை வாசன் பிய்த்துக்கொண்டு போய் தமாகாவைத் தொடங்கிய பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியைத் தந்ததைத்தவிர சிறந்த எதையும் டெல்லி தலைமை செய்திருக்க இயலாது. ப.சி. குழுவினருடன் மோதல்போக்கு என்கிற உட்கட்சி அபஸ்வரத்தைத் தவிர இளங்கோவன் ஆளுங்கட்சியை உரித்துக் காட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறார். போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜிமீது குற்றம்சாட்டியது, அக்ரிகிருஷ்ணமூர்த்தி மீது குற்றம் சாட்டி அறிக்கைவிட்டது, ஈரோடு அருகே சிப்காட் நிலம் கோகோ கோலா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் நடந்த முறைகேட்டைச் சுட்டிக்காட்டியது என பத்திரிகைகளில் செய்தி வருவதற்கு முன்பே எதைப்பற்றியும் யோசிக்காமல் அறிக்கை வெளியிடுகிறார் ஈவிகேஎஸ். வழக்கமான தன்னுடைய பார்முக்கு திரும்பியிருக்கும் இளங்கோவன், முன்பு செய்ததுபோல ஒற்றை ஆளாக காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் நகர்த்திக்கொண்டிருக்கிறார். ’உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக எங்கள் தலைவர்தான் செயல்படுகிறார்’ என்கிறார்கள் கதர்ச்சட்டையினர். அதிமுக தரப்புடன் திமுகவும் வழக்கு வாய்தா என்று பரபரப்பாக இருக்கும் இந்நிலையில் இளங்கோவன் சிலம்பம் சுழலுகிறது.
மே, 2015.